

மும்பை: அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் முதல் முறையாக 341 பெண் மாலுமிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் தெரிவித்தார்.
இந்திய கடற்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியா பல துறைகளில் முன்னேறி வருவதால், நாட்டின் கடல்சார் பாதுகாப்புக்கு அதிகமுக்கியத்துவம் அளிக்க வேண்டும்.தற்சார்பு இந்தியா தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு எங்களுக்கு வழங்கியுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் தற்சார்பு நிலையை அடைந்து விடுவோம் என மத்திய அரசிடம் இந்திய கடற்படை உறுதி அளித்துள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம்தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் இணைத்தது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. நாட்டின் அனைத்து பாதுகாப்பு தீர்வுகளும், இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் என இந்திய கடற்படை விரும்புகிறது.
அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் 3,000 வீரர்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர் களில் 341 பேர் பெண்கள். முதல் முறையாக கடற்படையில் பெண் மாலுமிகளை சேர்த்துள்ளோம். இவ்வாறு கடற்படை தளபதி அட்மிரல் ஹரி குமார் தெரிவித்தார்.