

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 2,180 ஆயுதப்படைக் காவலர்கள், 1,091 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள், 161 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள், 120 தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜூன் 30-ம் தேதி வெளியிட்டது.
இந்தப் பணியிடங்களுக்கு 2,99,887 ஆண்கள், 66,811 பெண்கள், 59 திருநங்கைகள் என மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 727 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு 35 நகரங்களில், 295 மையங்களில் இன்று நடைபெறுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் ஆகியோர் துணைக் குழுத் தலைவர்களாகவும், ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி ஆகியோர் சிறப்பு கண்காணிப்புக் குழு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேனா, நுழைவுச்சீட்டு, எழுது அட்டை தவிர வேறு எந்தப் பொருளையும் தேர்வு மையத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. புகைப்படம் ஒட்டப்பட்ட நுழைவுச்சீட்டுடன், குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலை. உள்ளிட்ட 16 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.