

புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 71,000 பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார்.
வரும் 2030-ம் ஆண்டில் இந்தியாவில் குறைந்தபட்சம் 9 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் என்று சர்வதேச நிதி அமைப்புகள் சுட்டிக் காட்டி உள்ளன. இதை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முத்ரா யோஜ்னா உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்திய இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த ரூ.12,000 கோடியில் ‘ஸ்கில் இந்தியா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து பிரதமர் மோடி கடந்த ஜுன் மாதம் விரிவான ஆய்வு நடத்தினார். அப்போது பல்வேறு துறைகளில் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதன்படி கடந்த அக்டோபர் 22-ம் தேதி ரோஜ்கார் மேளாவை (வேலைவாய்ப்பு திருவிழாவை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் முதல்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை அவர் வழங்கினார்.
இதன்தொடர்ச்சியாக 71,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்குகிறார்.
நாடு முழுவதும் 45 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் புதிய ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான ஆணையை பிரதமர் வழங்க உள்ளார்.
புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி வகுப்புகளையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதன்படி பல்வேறு அரசு துறைகளில் புதிய பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு பணியாளர்களுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிட மரபுகள், நேர்மை, மனித வளகொள்கைகள் குறித்து பயிற்சியின்போது விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
புதிய அரசு ஊழியர்கள் தங்களது அறிவு, திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். https://igotkarmayogi.gov.in/ இணையதளத்தில் பயிற்சி வகுப்புகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காலியிட விவரங்கள்: இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ரயில்வே துறையில் 2.93 லட்சம், பாதுகாப்புத் துறையில் 2.64 லட்சம், உள்துறையில் 1.43 லட்சம், அஞ்சல்துறையில் 90,000, வருவாய் துறையில் 80,000, கணக்கு தணிக்கு துறையில் 26,000, சுரங்கத் துறையில் 7,000, அணுசக்தி துறையில் 9,400, நீர் வளத் துறையில் 6,800, கலாச்சார துறையில் 3,800 உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை ஒன்றரை ஆண்டுக்குள் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட பணிஆணைகளை பிரதமர் வழங்குகிறார். அடுத்தடுத்த மாதங்களில் அரசுப் பணிக்கான ஆணைகள் தொடர்ந்து வழங்கப்படும். மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளுக்கான வாரந்திர விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு 'ரோஜ்கார் மேளா' பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அரசுப் பணி தவிர்த்து தனியார் வேலைவாய்ப்புகளை பெருக்கவும் மத்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘ஸ்டார்ட்அப்' உட்பட புதிய தொழில்களை தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது. இளைஞர்களின் தொழில்திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 'ஸ்கில் இந்தியா' திட்டத்தின் கீழ் மட்டும் இதுவரை ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.