

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும்.
இம்முகாமுக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள வயதுவரம்பு இல்லை.
பல முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணிக் காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்து வருகின்றனர். இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும்.இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடும் மனுதாரர்கள்www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விருப்பமுள்ள மனுதாரர்கள் இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். எனவே, மனுதாரர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு இம்முகாமை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.