

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்ட வருவாய் அலகில் மேட்டுப்பாளையம், அன்னூர், கோவை வடக்கு, சூலூர், மதுக்கரை, பேரூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர, அந்தந்த வட்ட எல்லைக்குள் வசிக்கும் நபர்களும் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக https://www.tn.gov.in மற்றும் https://cra.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வரும் நவம்பர் மாதம் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் தற்போதைய தேதி வரை அஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களும், மேற்காணும் இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.