Published : 13 Oct 2022 07:30 AM
Last Updated : 13 Oct 2022 07:30 AM

செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கு சென்னையில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: ஸ்டாலின் தலைமையில் அக்.15-ல் நடக்கிறது

செங்கல்பட்டு: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கான தனியார் துறை பங்கேற்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அக்.15-ம் தேதி நடக்கவுள்ளது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் 2-வது வெள்ளிக்கிழமை மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆட்சேர்ப்பும் சேர்த்து நடத்தப்படுகிறது. இதில், 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ படித்தவர்களை தேர்வு செய்கின்றன. மேலும் இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என்றும் வேலை நாடுநர்களுக்கு அறிவிக்கப்பட்டு இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்காக மெகா வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் அக்.15-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அக்.15 அன்று நடத்தவுள்ளன. சென்னை, ராயப்பேட்டை, புது கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களால் 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இம்முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அன்றே பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இம்முகாமில் வருகைபுரியும் வேலை நாடுநர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்கு பதிவுகள் செய்து திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அயல்நாட்டில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாக பதிவுகள் செய்யப்பட உள்ளன.

இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி இறுதி வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் வருகை புரிந்து தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.15-ல் ராயப்பேட்டை, புது கல்லூரியில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x