Published : 18 Sep 2022 04:55 AM
Last Updated : 18 Sep 2022 04:55 AM

நான் முதல்வன் திட்டத்தில் சென்னை டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய 3 மாணவிகள் தேர்வு

ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பாபு, ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் ஐஎம்சி தலைவர் செந்தில்குமார் உட்பட பலரும் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இருந்து 3 மாணவிகள், சென்னை டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலை யத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 4- ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வர் பாபு தலைமை தாங்கினார். ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் (ஐஎம்சி) தலைவர் செந்தில்குமார், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கண்காணிப்பு அதிகாரி அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக வாலாஜா அரசு சித்தா மருத்துவமனை மருத்துவர் சுகன்யா, ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினர்.

112 நபர்களுக்கு பட்டம்...: மேலும், 2020-2022 கல்வியாண்டில் 2 ஆண்டு காலம் பயிற்சியில் பிட்டர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக், பெயின்டர்(ஜென்ரல்), ஒயர்மேன், ஓஏஎம்டி(operated advanced machine tools) மற்றும் ஓராண்டு காலத்தில் வெல்டர் பிரிவிலும் என மொத்தம் 112 நபர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

71 பேருக்கு வேலை வாய்ப்பு: இதில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு நேர்காணலில் 71 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற எலெக்ட்ரீஷியன் பிரிவை சேர்ந்த 3 மாணவிகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னை பாடியில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் பாபு தெரிவித்தார்.

இதில், தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x