ஆசிரியர் பணிக்கான டெட் முதல்தாள் தேர்வு தள்ளிவைப்பு

ஆசிரியர் பணிக்கான டெட் முதல்தாள் தேர்வு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: ஆசிரியர் பணிக்கான டெட் முதல்தாள் தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. கரோனா பரவல் குறைந்ததையடுத்து நடப்பாண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. இரு தாள்களுக்கும் சேர்த்து 6.33 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

முதல் தாளுக்கான தேர்வு ஆக. 25 முதல் 31-ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, செப். 10 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என்று டிஆர்பி அறிவித்தது.

கணினி வழித் தேர்வு என்பதால்,பட்டதாரிகளுக்கு இணையதளத்தில் மாதிரிப் பயிற்சிகள் வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், டெட் முதல்தாள் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மாற்று தேதி பின்னர் அறிவிப்பு

இதுகுறித்து டிஆர்பி தலைவர் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘நிர்வாகக் காரணங்களால் செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை நடைபெறவிருந்த டெட் முதல்தாள் தேர்வு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஆர்பி அதி காரிகளிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வு கணினிவழியில் நடைபெற உள்ளதால், அதற்கான தொழில்நுட்ப வசதிகளை ஏற்பாடு செய்வதில் தொடர் தாமதம் நிலவுகிறது. அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதும், இதற்கு முக்கியக் காரணமாகும். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in