

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனங்கள் வேலைக்கு புதிதாக ஆட்கள் சேர்ப்பது அதிகரித்து இருக்கிறது.
வேலைவாய்ப்பு தளமான இண்டீட், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி - மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில், வேலைக்கு ஆட்கள் சேர்ப்பது 29% அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், ஹெல்த்கேர், இ-காமர்ஸ், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஐடி துறையில் 91% நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை வேலைக்கு சேர்த்துள்ளன என்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் வேலைவாய்ப்பு அதிகம் உருவானதாகவும் இண்டீட் குறிப்பிட்டுள்ளது.
புதிதாக ஊழியர்களை வேலைக்கு சேர்த்ததில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மும்பையும் மூன்றாம் இடத்தில் சென்னையும் உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் கல்லூரி முடித்த புதியவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.வரும் மாதங்களில் புதியவர்களை வேலைக்கு சேர்ப்பது மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கரோனாவுக்குப் பிறகு ஊழியர்களின் பணிவிலகல் அதிகரித்து இருக்கிறது. இதனால் நிறுவனங்கள் திறன் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதை ஈடுசெய்யும் வகையில் நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை வேலைக்கு சேர்ப்பதை அதிகப்படுத்தியுள்ளன. தவிர,
கரோனாவுக்குப் பிறகு டிஜிட்டலை நோக்கிய நகர்வு தீவிரமடைந்துள்ளதால், டிஜிட்டலாக்கம் சார்ந்து புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியாவில் 5ஜி விரைவில் நடைமுறைக்கு வர உள்ள நிலையில் இணையம், தொலைத்தொடர்பு சார்ந்து அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.