

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆக.28-ம் தேதி கிண்டியில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து ஆக.26-ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமில் 8,10,12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் பங்கேற்கலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் பங்கேற்க எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.