

தாட்கோவில் வேலை வாய்ப்புடன் கூடிய கல்வி பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கைத்தறி துணிகளை வாங்கி கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தாட்கோவில் வேலைவாய்ப்புடன் கூடிய கல்வி பயிற்சி என்ற திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், எம்.ஐ.டி, ஐ.ஐ.டியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்விக்கடன் வழங்கப்பட உள்ளது. முன்னதாக தேர்வு வைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு செல்லும்போதே தொழில் செய்து கொண்டு படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர உள்ளோம்.
வங்கிப் பணி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் என இருந்ததால், பல மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பது தடைபட்டது. தற்போது வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.