

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக, ஒரே கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான பணிநியமனங்கள் கிடைக்கச் செய்துள்ளது.
இங்கு, 2021-22-ம் கல்வியாண்டில் இரண்டு கட்ட வளாக வேலைவாய்ப்புகள் மூலம் 380 நிறுவனங்களிடம் இருந்து 1,199 வேலைவாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன. கோடைக்கால உள்ளகப் பயிற்சியின் வாயிலாகக் கிடைத்த 231 முன்வேலைவாய்ப்புகளுடன் சேர்த்து மொத்தத்தில் 1,430 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. 2018-19-ம் கல்வியாண்டில் கிடைத்த 1,151 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும்.
இதில், 14 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும் அடங்கும். இந்த எண்ணிக்கையும் கூட சாதனை அளவாகும். தவிர, 131 புத்தாக்க நிறுவனங்கள் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட வளாக வேலைவாய்ப்பின் போது 199 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
நடப்பு சீசனில் 61 எம்.பி.ஏ. மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், சென்னை ஐஐடி-ன் மேலாண்மைக் கல்வித்துறை 100 சதவீதம் வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டிற்கான வளாக வேலைவாய்ப்புகளின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ. 21.48 லட்சம். பெறப்பட்ட அதிகபட்ச சம்பளம் 250,000 அமெரிக்க டாலார்.
2021-22- ம் ஆண்டில் நடைபெற்ற வளாக வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்தவர்களில் 80 சதவீதம் மாணவர்கள், 2021-22-ம் ஆண்டில் பணிபுரிவதற்கு நியமனங்களைப் பெற்றுள்ளனர்.
வளாக வேலைவாய்ப்புக்கான முக்கிய காரணிகளை விளக்கிய சென்னை ஐஐடி பேராசிரியரும், ஆலோசகருமான (பணியமர்த்தல்) சி.எஸ்.சங்கர் ராம் கூறுகையில், "கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் மதிப்பை, அவர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகள்தான் பிரதிபலிக்கின்றன. 2021-22-ம் ஆண்டில் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புக் கிடைக்கும் வகையில் எங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது
சென்னை ஐஐடி -ல் மாணவர்களுக்கு அளிக்கப்படும் மிகக் சிறந்த பாடப்பயிற்சி, இணைப் பாடப்பயிற்சி வாய்ப்புகளுக்கு இது சான்றாக விளங்குகிறது. நடப்பு சீசனை வெற்றிகரமாக மாற்றிய நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், பணிநியமனங்கள் உள்ளிட்ட இதரப் பணிகளில் எங்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பார்கள் என நம்புகிறேன். எங்கள் கல்வி நிறுவனத்தின் வேலைவாய்ப்புக் குழுவினருக்கும், இந்த முயற்சிகளுக்கு இடைவிடாத ஆதரவை நல்கிவரும் நிர்வாகத்திற்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.
முதல்கட்டத்தில் மொத்தம் 45 சர்வதேசப் பணிநியமனங்கள் கிடைத்துள்ளன. இதில் 11 இடங்களை ரகுடேன் மொபைல் (Rakuten Mobile) நிறுவனம் வழங்கியுள்ளது. க்ளீன், மைக்ரான் டெக்னாலஜிஸ், ஹோண்டா ஆர்&டி., கொஹெஸ்டி, டா வின்சி டெரிவேட்டிவ்ஸ், அக்சென்டர் ஜப்பான், ஹிலாப்ஸ் இன்க்., க்வாண்ட்பாக்ஸ் ரிசர்ச், மீடியாடெக், மணி ஃபார்வர்டு, ரூபிக், டெர்ம்கிகரிட், ஊபர் போன்ற சர்வதேச நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.