

புதுடெல்லி: ஆயுத போலீஸ் படைகளில் 84,405 காலியிடங்களை அடுத்த டிசம்பருக்குள் உள்துறை அமைச்சகம் நிரப்பும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக எம்.பி.அனில் அகர்வால் எழுப்பிய கேள்விக்கு நேற்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:
உள்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி மத்திய ஆயுத போலீஸ் படைகளில் 84,405 காலியிடங்கள் உள்ளன. அசாம் ரைபிள்ஸ் படையில் 9,659, எல்லை பாதுகாப்பு படையில் 19,254, மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 10,918, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 29,985, இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படையில் 3,187, சஷாஸ்திர சீமா பல் படையில் 11,402 என்ற எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன.
இந்தப் படைகளின் மொத்த பணியிடங்கள் 10,05,779 ஆகும். மத்திய ஆயுத போலீஸ் படைகளில் உள்ள காலியிடங்களை 2023-ம் ஆண்டு டிசம்பருக்குள் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார். அக்னிப் பாதை என்ற திட்டத்தில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் பணி தனியாக நடக்கிறது.