

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளில் உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெறுகிறது.
தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 7,301 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், கடந்த மார்ச் 30-ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, 22 லட்சத்து 2,942 பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 9 லட்சத்து 35,354 ஆண்கள், 12 லட்சத்து 67,457 பெண்கள், 131 திருநங்கைகள் அடங்குவர்.
இன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 316 தாலுகாக்களில் 7,689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும்.8.59 மணிக்கு மேல் வருவோர் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல, தேர்வு முடிந்தபின் 12.45 மணி வரை தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும்.
ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உட்பட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். கரோனா பரவலால், தேர்வு மைய வளாகத்தில் தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பன உட்பட, ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
குரூப் 4 தேர்வையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், தேர்வில் பங்கேற்போர் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கவும், சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் அறிவுறுத்தியுள்ளோம்.
இது தொடர்பான மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கைக்கு இணங்க, தேவைப்படும் அளவுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், தேர்வு மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களுக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களில் அனைத்து பேருந்துகளும் கட்டாயம் நின்று செல்லும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை மண்டல அளவில் மேலாளர்கள் ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் செய்வார்கள். மாநகரம், நகரப் பகுதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 11,670 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையைப் பொருத்தவரை, வார இறுதி நாள்களில் 2,500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவது வழக்கம். ஆனால் குரூப் 4 தேர்வை முன்னிட்டு 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேசமயம், கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டாலும், தயாராக இருக்குமாறு பணிமனை மற்றும் பேருந்து நிலைய மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.