அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர 7.5 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்

அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர 7.5 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்

Published on

புதுடெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர நாடு முழுவதும் 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நாட்டில் 17 முதல் 21 வயதுள்ள இளைஞர்களை ராணுவத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக, ‘அக்னிபாதை’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்திய ராணுவம், விமான மற்றும் கப்பல் படையில் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகை அளிக்கப்படும்.

பயிற்சி முடித்தபின், அவர்களில் 25% பேர் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்றவர்களுக்கு ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரை ரொக்கம் வழங்கப்படும். என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.

எனினும், அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அவர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை வாபஸ்பெற இயலாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலர் லெப்டினன்ட் அனில் புரி கூறும்போது, ‘‘இந்திய நாட்டை துடிப்புடன், இளமையுடன் உருவாக்கும் நடவடிக்கையாகவே அக்னிபாதை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை’’ என்றார்.

இந்நிலையில், முதல் கட்டமாக அக்னிபாதை திட்டத்தின்கீழ் விமானப் படையில் இளைஞர்கள் சேர கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி இணைய வழியில் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. ஏராளமானோர் விண்ணப்பங்களைப் பதிவு செய்தனர். விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை உடன் முடிவடைந்தது.

இதுகுறித்து விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:

இதற்கு முன்னர் விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் சேர்க்கை நடந்த போது 6 லட்சத்து 31,528 பேர்தான் அதிகபட்சமாக விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அக்னிபாதை திட்டத்தின் கீழ் தற்போது 7 லட்சத்து 49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுதான் விமானப் படை வரலாற்றிலேயே அதிகபட்சமாகும். இவ்வாறு விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in