

சென்னை: ஏற்கெனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களுக்கு, தொழிற்சாலையை மேம்படுத்த ‘சூரிய சக்தி’ எனும் கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக சென்னை வட்ட எஸ்பிஐ தலைமை பொது மேலாளர் தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் (MSME) தினத்தையொட்டி, எஸ்பிஐ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - கனவு மெய்ப்பட’ எனும் தொழில் முனைவோருக்கான திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான குறு, சிறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் தொழில்கள் மற்றும் வர்த்தகம் கூடுதல் இயக்குநர் (திட்டங்கள்) ஆர்.ஏகாம்பரம் பேசியதாவது:
நீங்கள் தொடங்க விரும்பும் எந்த தொழிலானாலும் முதலில் அந்தத் தொழிலில் சேர்ந்து, அதன் தொழில்நுட்பம், உற்பத்தி, விற்பனை விவரங்களை நன்கு தெரிந்துகொள்ளுங்கள். எல்லா தொழிலும் நல்ல தொழில்தான். அதில் உங்கள் அனுபவமும் இருந்தால் கூடுதல் பலனைத் தரும். துணிந்து தொழில் செய்ய தொடங்குங்கள். வங்கி கடனுதவி இல்லாமல் யாரும் தொழில் செய்ய முடியாது. முதல் தடவை கடனை வாங்கி, அதனை நீங்கள் சரியாக செலுத்திவிட்டால், அடுத்தமுறை வங்கியே உங்களை அழைத்து கடன் தரும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் ராதா கிருஷ்ணா பேசியதாவது:
கடனைத் திருப்பிச் செலுத்துவது என்பது வங்கியாளர்களின் உளவியலைக் கட்டுப்படுத்தும் மிக முக்கிய அம்சமாகும், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு கடன் கொடுப்பதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. வங்கியில் கடன் பெறுவதற்கான எளிய வழி, முதலில் வங்கியில் கணக்குத் தொடங்கி, நீங்கள் தினமும் செய்யும் விற்பனையை டெபாசிட் செய்யுங்கள். வருடத்தில் நீங்கள் செய்த தொழிலில் 20 சதவீதம் எஸ்பிஐ-இல் இருந்து கடனாகப் பெறலாம்.
இதுவரை எந்த தொழிலையும் தொடங்காதவர்கள், தங்கள் வணிகத்துக்கு கடன் பெற விரும்புகிறார்கள் என்றால், அவர்கள் தங்களின் வணிக முன்மொழிவை வங்கியிடம் சமர்ப்பித்து, ‘இது எனது திட்டம் மற்றும் செயல்பாடு’ என்று வங்கிக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும், வங்கி அதிகாரிகள் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பரிசீலித்து முடிவு எடுப்பார்கள்.
ஏற்கெனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களுக்கு, அவர்களின் தொழிற்சாலையை மேம்படுத்த ‘சூரிய சக்தி’ எனும் ஒரு கடனுதவியை எஸ்பிஐ வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் 1 மெகாவாட் உற்பத்தி திறன் வரை கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்க (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் பேசும்போது, “குறு, சிறு தொழில் முனைவோர் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பான செயல்திட்டங்களை விரைவாக முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது. இந்தியாவிலேயே சிட்கோ எனும் திட்டத்தை, முதல்வராக கருணாநிதி இருந்தபோது முதன்முதலாக உருவாக்கினார். தமிழக அரசு பல நல்ல திட்டங்களைத் தீட்டி, சிறு தொழில் முனைவோர் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவிவருகிறது. தற்போது திருவாரூரில் விவசாய பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட்டுள்ளது, இன்றைய அரசின் சிறப்பான செயலாகும்” என்றார்.