Published : 30 Jun 2022 05:03 AM
Last Updated : 30 Jun 2022 05:03 AM

3,552 காவலர் பணியிடத்தை நிரப்ப இன்று அறிவிப்பு வெளியீடு

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகர்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 30-ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது.

இத் தேர்வு எழுத விரும்பும் இளைஞர்கள், ஜூலை 7-ம் தேதி முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத் தேர்வுக்கு இந்த இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வு குழும அலுவலகம், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் ஜூலை மாதம் 7-ஆம் தேதி முதல், வாரத்தின் 7 நாள்களும் செயல்படும்.

விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 044-40016200, 044-28413658 ஆகிய தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x