Published : 28 Jun 2022 04:37 AM
Last Updated : 28 Jun 2022 04:37 AM

அக்னி பாதை திட்டத்தில் விமானப்படையில் சேர 4 நாளில் 94 ஆயிரம் விண்ணப்பம்

புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 4 நாட்களில் இளைஞர்களிடம் இருந்து 94 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

ராணுவத்தில் 17 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் சேர்ந்து, 4 ஆண்டுகள் பயிற்சி பெறும் அக்னி பாதை திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சில மாநிலங்களில் ரயில்கள் கொளுத்தப்பட்டன. இந்த திட்டத்தைக் கைவிட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எனினும், இந்த திட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர்களும், ராணுவ அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.

இந்த திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேருவதற்கான நடைமுறைகள் கடந்த 24-ம் தேதி தொடங்கப்பட்டு, இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

விமானப்படையில் சேர 4 நாட்களில் 94,281 விண்ணப்பங்களை இளைஞர்கள் அனுப்பியுள்ளனர். இதை ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் பரத் பூஷண் பாபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு அக்னி பாதை திட்டத்தின் கீழ் 3,000 இளைஞர்களை விமானப்படை சேர்த்து, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.

இவர்களுக்கான தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவை முடிந்த பிறகு, தேர்வான இளைஞர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதி முதல் பயிற்சி தொடங்கும் என்று விமானப்படை அறிவித்துள்ளது.

விமானப்படை பணிகளுக்கு விண்ணப்பிப்பது ஜூலை 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. அக்னி பாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பயிற்சி முடித்த பின்னர், அவர்களில் தகுதியானவர்கள் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர். மீதம் உள்ளவர்களுக்கு ரொக்கமாக ரூ.11 லட்சம் வழங்கப்படும். மேலும், அவர்கள் தொழில் தொடங்கவும், அரசு, தனியார் நிறுவனங்களில் பணிகளில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநில அரசுகள், அக்னி பாதை திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்து வரும் இளைஞர்கள் மாநில காவல் துறையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x