

புதுடெல்லி: அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 3,000 பணியிடங்களுக்கு 56,960 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
17 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து 4 ஆண்டுகள் பயிற்சி பெறும் அக்னிப்பாதை திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேருவதற்கான நடைமுறைகள் கடந்த 24-ம் தேதி தொடங்கப்பட்டு இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. விமானப்படையின் 3,000 பணியிடங்களுக்கு 3 நாட்களில் 56,960 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் 3,000 இளைஞர்களை விமானப்படை சேர்த்துக் கொண்டு பயிற்சி அளிக்கிறது. இவர்களுக்கான தேர்வு மருத்துவப் பரிசோதனை ஆகியவை முடிந்த பிறகு டிசம்பர் 30-ம் தேதி முதல் தேர்வான இளைஞர்களுக்கு பயிற்சி தொடங்கும் என்று விமானப்படை அறிவித்துள்ளது.
அக்னிப்பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. ரயில்கள் கொளுத்தப்பட்டன. எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 3,000 இடங்களுக்கு 3 நாட்களில் 56,960 இளைஞர்கள் விண்ணப்பித்திருப்பது, இந்தத் திட்டத்துக்கு இளைஞர்களிடையே வரவேற்பு இருப்பதை காட்டுவதாக கருதப்படுகிறது.