

சென்னை: தமிழக காவல் துறையில் 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 2.23 லட்சம் பேர் எழுதினார்கள்.
தமிழக காவல் துறையில் 2022-ம் ஆண்டுக்கான 444 காவல் உதவி ஆய்வாளர்கள் (எஸ்.ஐ) பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடந்தது. சென்னையில் மட்டும் கே.கே.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரி, வேளச்சேரி குருநானக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உட்பட 11 மையங்களில் நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 43 திருநங்கைகள், 43,949 பெண்கள் உட்பட 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு அறைக்குள் காலை 9.15 மணி முதல் 9.45 மணி வரை தேர்வர்கள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் முதன்மைத் எழுத்து தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது.
முதன்மை எழுத்துத் தேர்வில் நடப்பு நிகழ்வுகள், உளவியல், வரலாறு, அறிவியல், தமிழ் உள்ளிட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. பின்னர் தமிழ் மொழி தகுதித் தேர்வு பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. மாலை 5.10 மணி வரை நடைபெற்றது. மேலும் முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
காவல் துறையில் வேலை செய்பவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது. இவர்களுக்கு ஜூன் 26-ம் தேதி (இன்று) தனியாக எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.