

தூத்துக்குடியில் அக்னிப் பாதை திட்டத்தின் கீழ் நடைபெறும் விமானப்படை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள கின்ஸ் அகாடமியில் மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் நடைபெறும் விமானப்படை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவுக்கு அகாடமி நிறுவனர் எஸ்.பேச்சிமுத்து தலைமை வகித்தார்.
கைத்தறித்துறை ஆய்வாளர் டி.ரகு இலவச பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது:
அக்னிப் பாதை வீரர்களுக்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம்24-ம் தேதி நடைபெற உள்ளது.எழுத்துத்தேர்வு மற்றும் அதனைதொடர்ந்து நடைபெறும் உடற்தகுதித் தேர்வின் மூலம் 46,000வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு முதல் 6 மாதம்பயிற்சி நடக்கும். பயிற்சியின் போதே மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் வழங்கப்படும். 4 வருடம் முடிந்த பிறகு 25 சதவீதம் பேர் ராணுவத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மீதமுள்ள வீரர்கள் சி.ஆர். பி.எப்., அசாம் ரைபிள்ஸ் போன்ற துணை ராணுவப் பிரிவில் எளிதாக சேரலாம்.
பணி முடிவில் ரூ.11 லட்சம் உதவித்தொகையுடன் , ஒழுக்கம் மற்றும் மிகவும் திறமை மிக்கவர்களாக மாணவர்கள் திரும்பி வருவார்கள். எனவே, ஆண், பெண் இருபாலரும் அதிக அளவில் இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஆன்லைனிலும், நேரடியாகவும் நடந்த பயிற்சி வகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவும், பயிற்சியும் 30 நாட்களும் இலவசமாக வழங்கப்படும் என அகடாமி நிறுவனர் தெரிவித்தார்.
அகாடமி முன்னாள் மாணவர் ஆர். சிவகுருநாதன், பயிற்றுநர்கள் ஆர்.ராஜபதி, வெற்றிவேல் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.