

புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்தில் விமானப்படையில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது.
ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 17.5 வயது முதல் 23 வயது வரையிலான இருபாலரும் முப்படைகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் சேரும் வீரர்கள், 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதன்படி தகுதி, திறமையின் அடிப்படையில் 25 சதவீத வீரர்கள் நிரந்தர பணியில் சேர்க்கப்படுவார்கள். ஓய்வு பெறும் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு படைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புதிய திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் ஒருபோதும் திட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என்று மத்திய அரசு திட்ட வட்டமாக அறிவித்தது.
இந்த சூழலில் அக்னி பாதை திட்டத்தில் ராணுவத்தில் சேருவதற்கான அறிவிக்கை கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலையில் தொடங்கும் என்று ராணுவம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அக்னி பாதை திட்டத்தில் விமானப் படையில் சேருவதற்கான அறிவிக்கை கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது. கல்வித் தகுதி, தேர்வு நடைமுறை குறித்த முழு விவரங்கள் அந்த அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் அக்னி பாதை திட்டத்தில் விமானப்படையில் சேருவதற்கான விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது. வரும் ஜூலை 5-ம் தேதி வரை விமானப்படை இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இரு கட்டங்களாக ஆன்லைன் தேர்வும் 3-ம் கட்டமாக உடற்தகுதி தேர்வும் நடத்தப்பட உள்ளது. வரும் டிசம்பர் 11-ம் தேதி அக்னி வீரர்கள் விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளனர். அக்னி பாதை திட்டத்தில் கடற்படையில் சேருவதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவில் ராணுவத்துக்கான செலவினம் குறைக்கப்பட்டு, அந்த நாட்டு படைகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. மத்திய பாதுகாப்பு பட்ஜெட்டில் 25 சதவீதம் வீரர்களின் ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. அக்னி பாதை திட்டத்தால் ஓய்வூதிய செலவினம் குறைக்கப்பட்டு முப்படைகளும் நவீனமயமாக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.