

புதுடெல்லி: ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தில் வேலைக்குச் சேரும் இளைஞர்களின் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அக்னி பாதை’ திட்டத்தில் 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம். தற்போதைய கல்வித் தகுதி, உடற்தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும்.
புதிய திட்டத்தில் பணியில் சேருவோர், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதல் 6 மாதங்கள் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். முதலாம் ஆண்டு ரூ.30,000, இரண்டாம் ஆண்டு ரூ.33,000, மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும். ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்படும். மீதமுள்ள 70 சதவீதம் மட்டும் வழங்கப்படும். பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பதக்கம், விருதுகள் அனைத்தும் அக்னி வீரர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, தற்போது இந்த திட்டத்தில் சேர்பவர்களுக்கான வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருவருடத்துக்கு மட்டுமே வயது வரம்பு அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆட்சேர்ப்பில் 17.5 வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்கள் இடம்பெறலாம். சுமார் 46,000 வீரர்கள் இந்த ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளார்கள்.