Published : 18 May 2022 06:38 AM
Last Updated : 18 May 2022 06:38 AM

குரூப் 2 தேர்வு முடிவு ஜூனில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

சென்னை: குரூப் 2 தேர்வு முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

குரூப் 2 மற்றும் 2ஏ நிலையில் உள்ள 5,529 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடை பெறும். இந்தத் தேர்வை மொத்தம் 11 லட்சத்து 78,175 பட்டதாரிகள் எழுதவுள்ளனர். இதில் ஆண்கள் 4 லட்சத்து 96,247, பெண்கள் 6 லட்சத்து 81,880, 3-ம் பாலினத்தவர் 48 மற்றும் மாற்றுத் திறனாளிகள் 14,534 பேர்.

அதிகபட்சமாக சென்னையில் 1.15 லட்சம் பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 5,624 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர்.

அதேபோல், தமிழ் வழி ஒதுக்கீட்டில் 79,942 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். குரூப் 2 தேர்வை கடந்த முறையைவிட தற்போது 1.50 லட்சம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர். அதற்கேற்ப சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக் கூடத்துக்கு ஒருவர் வீதம் 4,012 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு பணிகளில் 323 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்படும்.

தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 9.10 லட்சம் ஹால்டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை அனைத்து பக்கங்களுடன் முழுமையாக பிரின்ட் எடுத்துவர வேண்டும். ஆதார் கார்டு உட்பட ஏதேனும் ஒரு அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம்.

குரூப் 2 தேர்வு முடிவை ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதிலிருந்து முதன்மைத் தேர்வுக்கு 1:10 என்ற மதிப்பீட்டின்படி பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுவர். முதன்மைத் தேர்வு செப்டம்பரில் நடத்தப்படும்.

இதற்கிடையே குரூப் 1 முதன்மைத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இந்த மாதம் இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட பரிசீலனை செய்து வருகிறோம். அதேபோல், குரூப் 4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 100 வரை உயர்ந்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு தகுந்த முறையில் மேற்கொள்ளப்படுவதால், இதுவரை போலி ஆவண குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. ஏற்கெனவே அறிவித்தபடி, வரும் காலங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையில் தேர்வை நடத்துவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x