

கரூர்: கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் கரூர் அரசு கலைக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. முன்னதாக, 8-ம் வகுப்பு தேர்ச்சி கல்வித்தகுதி கொண்ட 24 பணியிடங்களுக்கு இளநிலை, முதுநிலை, பி.எட், பொறியியல் பட்டதாரிகள் உட்பட 3,565 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர்(பொ) என்.முரளிதரன் தலைமையில் நேற்று நடைபெற்ற நேர்முகத் தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பு, சைக்கிள் ஓட்டுதல், கறவை பசுக்களை கையாளுதல் உள்ளிட்ட சோதனைகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெற்றன. இந்த நேர்காணல் பணியில் கால்நடை ஊழியர்கள் 65 பேர் ஈடுபட்டிருந்தனர். ஏப்.24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக ஏப்.26-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த நேர்காணலுக்கு நாள்தோறும் 800 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.