Published : 01 Apr 2022 07:09 AM
Last Updated : 01 Apr 2022 07:09 AM

நிலஅளவையர், வரைவாளர் பணியிடங்களில் சிவில் இன்ஜி. டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு: கல்வித் தகுதியில் மாற்றம் செய்து அரசாணை

சென்னை: நிலஅளவையர், வரைவாளர், நிலஅளவை மற்றும் பதிவேடுகள்துறை துணை ஆய்வாளர் பணியிடங்களில் சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலர்குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நிலஅளவை பதிவேடுகள் துறை சார்நிலை பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, பின்வரும் பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான கல்வித் தகுதிகீழ்க்காணும் வகையில் திருத்தி யமைக்கப்படுகிறது.

நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துணை ஆய்வாளர் பதவிகளுக்கு பிஇ (சிவில் இன்ஜினீயரிங் அல்லது பிஇ (ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் அல்லது எம்எஸ்சி (புவியியல்) அல்லது எம்எஸ்சி (புவி தொலையுணர்வு மற்றும் புவி தகவல் தொழில்நுட்பம் முடித்தவர்களும், நில அளவையர் (ஃபீல்டு சர்வேயர்) பதவிக்கு சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ அல்லது என்சிவிடி-யால் சர்வேயர் படிப்புக்கு வழங்கப்பட்ட என்டிசி சான்றிதழ் அல்லது மெட்ராஸ் இன்ஜினீயரிங் குரூப் வழங்கிய ஆர்மி டிரேட் சர்வேயர் சான்றிதழ் பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், வரைவாளர் (டிராப்ட்ஸ்மேன்) பதவிக்கு சிவில்இன்ஜினீயரிங் டிப்ளமோ அல்லதுவரைவாளர் படிப்புக்கு என்சிடிவிடி-யால் வழங்கப்பட்ட என்டிசி சான்றிதழ் அல்லது மெட்ராஸ் இன்ஜினீயரிங் குரூப் வழங்கிய ஆர்மி டிரேட் டிராப்ட்ஸ்மேன் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

நிலஅளவையர், வரைவாளர் பதவிகளுக்கு இதுவரை கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிநிர்ணயிக்கப்பட்டு, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன. தற்போது புதியகல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அந்தப் பதவிகளில் உள்ள காலியிடங்கள் தனித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம்வெளியிட்ட குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கையில் நிலஅளவையர், வரைவாளர் பதவிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x