வண்டலூரில் வரும் 20-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 50,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகிய துறைகள் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் 20-ம் தேதி அன்று வண்டலூர், பி.எஸ்.அப்தூர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடத்தவுள்ளன.

இம்முகாமில் 400-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அன்றே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், இம்முகாமில் வருகைபுரியும் வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்குப் பதிவுகள் செய்து திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அயல்நாட்டில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாகப் பதிவுகள் செய்யப்பட உள்ளன.

இம்முகாமில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், ஃபார்மசி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம்.

இம்முகாமில் கலந்துகொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் வந்து தங்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்பைப் பெற்றுப் பயனடையலாம் எனச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in