

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / அமைப்புகளில் பணி நியமனத்திற்கு பணியாளர் தேர்வாணையம் ‘ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையை 01.02.2022 அன்று வெளியிட்டது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள் / சட்டரீதியான அமைப்புகள் / நடுவர் மன்றங்கள் போன்றவற்றில் எல்டிசி / இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர் / தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு.
பதவியின் பெயர்கள், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் ssc.nic.in. மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 07.03.2022. ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 08.03.2022.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தென் பிராந்தியத்தில் 2022 மே மாதத்தில், கணினி அடிப்படையிலான தேர்வுகள் கீழ்காணும் முறையில் 23 மையங்கள் / நகரங்களில் நடைபெறும்.
ஆந்திரப்பிரதேசத்தில் 11 மையங்கள்; தெலங்கானாவில் 3 மையங்கள்; தமிழ்நாட்டில் 8 மையங்கள்; புதுச்சேரியில் ஒரு மையம் என்று பணியாளர் தேர்வாணையத்தின் இணைச் செயலர் மற்றும் மண்டல இயக்குனர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.