சென்னை உட்பட 5 நகரங்களில் காவலர் குடும்பத்துக்கான வேலைவாய்ப்பு முகாம்: தனியார் நிறுவனங்களில் பணியாற்ற 1,046 பேர் தேர்வு

சென்னையில் நேற்று நடந்த போலீஸார் குறைதீர் முகாமில் காவலர்களின் குறைகளை கேட்டறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். படம்: ம.பிரபு
சென்னையில் நேற்று நடந்த போலீஸார் குறைதீர் முகாமில் காவலர்களின் குறைகளை கேட்டறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: காவலர்கள், காவல் துறை பணியாளர்களின் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், தனியார் நிறுவனங்களில் பணியாற்ற 1,046 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காவல் துறையில் பணிபுரியும் போலீஸார், அமைச்சுப் பணியாளர்களின் இல்லத்தரசிகள், வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர டிஜிபி சைலேந்திர பாபு முடிவு செய்தார். இதையடுத்து, அவர்களது குடும்பங்களில் வேலை தேடுவோர், வேலைக்கு தயாராக இருப்பவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. கல்வி தகுதி, சிறப்பு தகுதி, எதிர்பார்ப்பு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து, சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூரில் ‘காவல் குடும்ப வேலைவாய்ப்பு முகாம்’ கடந்த 22, 23-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தனியார் வங்கிகள், நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் 274 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் 4,009 பேர் கலந்துகொண்டதில், 1,046 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் நடந்த நேர்காணலில் 1,849 பேர் கலந்துகொண்டனர். முதல்கட்டமாக தனியார் நிறுவனங்கள் மூலம் 115 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விரைவில் வழங்க உள்ளார். தற்காலிகமாக 442 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in