Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

காவல்துறை வாரிசுகள் மேலும் 800 பேருக்கு வேலைவாய்ப்பு: குறைதீர் முகாமில் டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

திருச்சி: காவல்துறை வாரிசுகள் 800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் காவல் துறையில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களுக்கான குறைதீர் முகாம் திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

குறைதீர் முகாமுக்கு டிஜிபி சைலேந்திர பாபு தலைமை வகித்து காவல் துறையினரிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முன்னதாக, அவர் பேசியது:

காவல் துறையினர் தைரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றும் வகையில், அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சிறு தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஏற்கெனவே இருந்த தண்டனைகள் மீது வரப் பெற்ற கருணை மனுக்களின் அடிப்படையில், காவல் துறையில் கடந்த 5 மாதங்களில் 366 பேரின் தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 164 பேரின் தண்டனைக் குறைக்கப்பட்டது. பணியில் இருந்து நீக்கப்பட்ட 51 பேர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். விருப்பத்தின் அடிப்படையில் 1,353 பேருக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் கடந்த வாரம் அளிக்கப்பட்டது.

காவல் துறை பணி என்பது சவாலானது. அவர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். அதனடிப்படையில், அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. காவலர்கள் உற்சாகத்துடன், சிறந்து பணியாற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. காவலர்கள் அடையாள அட்டையை காட்டி பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது. காவல்துறையினரின் பிள்ளைகள் 800 பேருக்கு அண்மையில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், மேலும் 800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது என்றார்.

முகாமில் மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், டிஐஜிக்கள் திருச்சி ஆ.சரவணசுந்தர், தஞ்சாவூர் பிரவேஸ் குமார், திருச்சி எஸ்.பி சுஜித்குமார் உட்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது மழை வெள்ள காலத்தில் பல்வேறு வகைகளில் சேவையாற்றிய பொதுமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு வெகுமதிகளை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x