மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

’’மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் (Staff Selection Commission) பல்வேறு துறைகளில், பல்நோக்குப் பணியாளர், பெண்கள் படைப் பயிற்றுநர், மருத்துவ உதவியாளர், பொறுப்பாளர் போன்ற 3,261 பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணி காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணையம் வழியாக விண்ணப்பிக்கக் கடைசி நாள் 25.10.2021 ஆகும். பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் பணி நியமனம் பெறுவதற்கு ஏதுவாக இந்தப் போட்டித் தேர்விற்கான அனைத்துப் பாடக்குறிப்புகளும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, இப்போட்டித் தேர்வினை எழுத விரும்பும் இளைஞர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து பாடக்குறிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயனடையலாம். இதுமட்டுமின்றி, அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான பாடக்குறிப்புகள் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களின் வாயிலாகப் பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வுகளுக்கென (Staff Selection Commission Exam) கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நேரடியாகவோ/ இணைய வழியாகவோ நடத்தப்படவுள்ளன.

எனவே, தங்களது மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தைத் தொடர்புகொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்’’.

இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in