சென்னையில் பிப்.19-ம் தேதி  துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சென்னையில் வரும் 19-ம் தேதி துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வே.விஷ்ணு இன்று (பிப்.11) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநிலத் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19-ம் தேதி அன்று, புதன் கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை கீழ்க்காணும் முகவரியில் துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10-க்கும் மேற்பட்ட துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.

பி.எஸ்சி.நர்சிங், டிப்ளமோ ஃபார்ம் (Dip Pharm), பி.ஃபார்ம், எம்.ஃபார்ம், ஃபார்ம் டி (pharm D) உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகள், அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகள் (டி.எம்.எல்.டி) படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்கள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியமில்லை. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு மாநிலத் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 044 - 22500134 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் முகவரி

மாநிலத் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,

ஏ-28, முதல்தளம், டான்சி கார்ப்பரேட் வளாகம்,

திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி,

சென்னை - 600 032.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in