

ஏராளமான நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
10, 12-ம் வகுப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் பெற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் (கை, கால் ஊனமுற்றோர், காது கேளாதோர்) இதில் விண்ணப்பிக்கலாம். (பார்வை இழந்தவர்களுக்குத் தனியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். )
எப்படி விண்ணப்பிப்பது?
வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். https://weareyourvoice.org/web/event/employee-register என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்?
இல்லை. கட்டணம் எதுவும் இன்றி முகாம் நடத்தப்படுகிறது.
எங்கே, எப்போது முகாம் நடைபெறுகிறது?
ஆகஸ்ட் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கிறது.
என்ன கொண்டு வரவேண்டும்?
ரெஸ்யூம், மதிப்பெண் சான்றிதழ்கள், முகவரி அட்டைகள் மற்றும் அவற்றின் நகல்கள்.
இந்த முகாமை நடத்தும் We Are Your Voice அமைப்பின் நிறுவர் பாசித் இதுகுறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசும்போது, ''மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்து உரக்கக் குரல் எழுப்ப, 2015-ல் இந்த அமைப்பைத் தொடங்கினோம். இதுவரை சென்னை, பெங்களூரு, குவாஹாட்டி, வேலூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளோம். அதில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்துள்ளது.
ஐபிஎம், ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, கேப் ஜெமினி, எம்பசிஸ் உள்ளிட்ட ஏராளமான முதன்மை நிறுவனங்கள் இதில் கலந்துகொள்கின்றன. வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் தொழில் தொடங்கவும் வழிவகை செய்கிறோம். தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NHFDC) மூலம் கடன் பெறவும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு சுமார் 5,000 பேர் வருவர் என்று எதிர்பார்க்கிறோம். வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் முகாமை ஒருங்கிணைக்கின்றனர். இதற்காகவே 200-க்கும் மேற்பட்ட வீல்சேர்கள், சாய்வுப்பாதைகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம்'' என்கிறார் பாசித்.
கூடுதல் விவரங்களுக்கு: https://weareyourvoice.org/web/site/index என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in