Published : 04 Nov 2025 06:36 PM
Last Updated : 04 Nov 2025 06:36 PM

குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட அறிவிப்புகளுடன் வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட அறிவிப்புகளுடன் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். அண்மைக்காலமாக மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சிப்காட், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி வாயிலாகவே தேர்வு செய்யப்படுகின்றனர்.

தற்போது புதிதாக மாநில அரசு பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் (இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவி பதிவாளர் போன்ற பதவிகள்) டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய தமிழக அரசு சட்டம் இயற்றியது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, தமிழகத்தில் உள்ள 22 அரசு பல்கலைக்கழங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்.

கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வின் முடிவு மற்றும் தரவரிசை பட்டியல் அக்டோபர் 22-ம் தேதி வெளியிடப்பட்டு அதைத் தொடர்ந்து ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் கடந்த 29-ம் தேதி வெளியானது. குருப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் முதலில் 3,935 ஆக இருந்த நிலையில், புதிதாக 727 இடங்கள் சேர்க்கப்பட்டு தற்போது மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்று குருப்-4 தேர்வர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல், 595 காலியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குருப் 2 மற்றும் குருப்-2 தேர்விலும் காலியிடங்கள் அதிகரிக்குமா என்று தேர்வர்கள் நீண்ட எதிர்பார்ப்ப்பில் இருந்து வருகின்றனர்.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியது: “குருப்-4 தேர்வில் வெவ்வேறு அரசு துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான பணிகள் ஒன்றரை மாதங்களுக்கு மேல் செல்லும். எனவே, அதுவரையிலான காலகட்டத்தில் வரப்பெறும் காலிப்பணியிடங்களை சேர்க்க முடியும்.

எனவே, குருப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்படும். அதேபோல், ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் குருப்-2 ஏ தேர்விலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. முந்தைய ஆண்டு தேர்வுகளின்போது இரண்டு அல்லது 3 ஆண்டுகளுக்குரிய காலிப்பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்பட்டதால் காலியிடங்கள் அதிகம் இருந்ததுபோல் தோன்றியிருக்கும். தற்போது அந்தந்த ஆண்டுக்குரிய காலியிடங்கள் அதே ஆண்டில் நிரப்பப்படுவதால் காலியிடங்கள் குறைவாக இருப்பது போன்று தெரியலாம்.

பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்ப அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பாக அரசிடமிருந்து உத்தரவு வந்ததும் அந்த பதவிகளில் உள்ள காலியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கல்வித்தகுதிக்கு ஏற்ப அவை குரூப்-4 தேர்வு மூலமாகவோ அல்லது குரூப்-2 அல்லது குரூப் 2 ஏ தேர்வு மூலமாகவே நிரப்பப்படும். 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும். அதில் குருப்-1, குருப்-2 மற்றும் 2 ஏ, குருப்-4 தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெறும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x