சர்வேயர், வரைவாளர் பதவிகளுக்கு அக்.13-ம் தேதி 5-வது கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு நிலஅளவை பதிவேடுகள் சார்நிலை பணியில் அடங்கிய நிலஅளவர் (சர்வேயர்), வரைவாளர் பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 5-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அக்டோபர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அழைப்பாணையை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்பாணை தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைத்து தேர்வர்களும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு, பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது,. குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கீ ஆன்ஸர் வெளியீடு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி) தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (டிப்ளமா மற்றும் ஐடிஐ ) அடங்கிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 7 முதல் 27-ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் நடத்தப்பட்டன.
அதில் ஓஎம்ஆர் வகை தேர்வாக ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற்ற தமிழ் தகுதித்தேர்வு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேல்முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள், அக்டோபர் 7-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் முறையீடு செய்யலாம். அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் வழியாக பெறப்படும் முறையீடுகள் ஏற்கப்படாது’ என தெரிவித்துள்ளார்.
