

சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் 47 சதவீதம் பேர் பங்கேற்வில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 1,033 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மே மாதம் 21-ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து இணையவழியில் இந்த தேர்வெழுத 92,495 பட்டதாரிகள் வரை விண்ணப்பித்தனர். இதற்கான பாடவாரியான போட்டித் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 4 முதல் 10-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது.
தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவு, திறனறிவு, மொழிப்பெயர்ப்பு தேர்வு நேற்று காலை, மாலை என இரு வேளைகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் 144 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுத 92,495 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், 48,627 பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர். அதாவது, 43,882 (47.5%) பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து பாடவாரியான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.