

சென்னை: சர்வேயர், வரைவாளர் பதவிகளுக்கான 4-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 19 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் நிலஅளவர் (சர்வேயர்), வரைவாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 4-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஆகஸ்ட் 19 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அழைப்பாணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு தேர்வுசெய்யப்படுவர் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. குறிப்பிட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத்தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.