வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 15 லட்சத்தில் இருந்து 3.17 லட்சமாக குறைந்தது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

சேலம்: தமிழகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 15.01 லட்சத்தில் இருந்து 3.17 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல், படித்த வேலை வாய்ப்பற்றோருக்கு அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயனடைவோர் எண்ணிக்கையும் 55 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிர மாகக் குறைந்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு, தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். தொழிற்கல்வி படித்தவர்களுக்கு தனி பதிவு அலுவல கங்கள் உள்ளன.

குறிப்பாக, மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு அலுவலகங்கள் - 38, தொழில்சார் வேலைவாய்ப்பு மையம் - 2, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் - 1 என தமிழகத்தில் 41 இடங்களில் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2021-ம் ஆண்டு ஏப்ரல் வரை வேலைவாய்ப்புக்காக மொத்தம் 63.94 லட்சம் பேர் பதிவு செய்து உயிர் பதிவேட்டில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டு களாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித் தகுதியை பதிவு செய்வோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந் துள்ளது. இதுதொடர்பாக, இடது தொழிற்சங்க மையம் துணைத் தலைவர் விஸ்வநாதன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்றுள்ளார்.

அதில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 15.01 லட்சமாகவும், 2022-ம் ஆண்டில் 4.77 லட்சமாகவும், 2023-ம் ஆண்டில் 3.37 லட்சமாகவும், கடந்த 2024-ம் ஆண்டில் 3.17 லட்சமாகவும் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக 2021-ல் 4,767 பேர், 2022-ல் 2,608 பேர், 2023-ல் 2,652 பேர், 2024-ல் 3,812 பேர் என வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது சுமார் 1 சதவீதம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகைமாற்றுத் திறனாளி இளைஞர்க ளுக்கு, அவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் பதிவை புதுப்பித்து வந்தால், அரசு சார்பில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதில், 10-ம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.600, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்சம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான செலவினமும் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கை பொதுப் பிரிவினரில் 2021-22-ம் ஆண்டில் 55,342 பேருக்கு மொத்தம் ரூ.27.47 கோடியும், 2022-23-ம் ஆண்டில் 56,564 பேருக்கு ரூ.32.27 கோடியும், 2023-24-ம் ஆண்டில் 25,396 பேருக்கு ரூ.23.44 கோடியும், 2024-25-ம் ஆண்டில் 15,203 பேருக்கு ரூ.10.99 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வேலைவாய்ப்பற்றோருக்கான அரசு உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வந்ததோடு, அதற்கான செலவினமும் 60 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதேபோல், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு உதவித்தொகை யைப் பொறுத்தவரை, 2021-22-ம் ஆண்டில் 14,420 பேருக்கு ரூ.14.41 கோடியும், 2022-23-ம் ஆண்டில் 13,697 பேருக்கு ரூ.13.25 கோடியும், 2023-24-ம் ஆண்டில் 3,290 பேருக்கு ரூ.8.51 கோடியும், 2024-25-ம் ஆண்டில் 2,542 பேருக்கு ரூ.2.76 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததுடன், உதவித்தொகைக்கான செலவினமும் மிகவும் குறைந்துவிட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in