

சென்னை: கிண்டியில் நடைபெறும் துணி ஆபரணங்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் ஜூலை 10-ம் தேதி, கைகளால் செய்யப்படும் துணி ஆபரணங்களை தயாரிப்பது குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் ஜிம்கி உள்ளிட்ட பல்வேறு கம்மல் வகைகள், நீண்ட மற்றும் குறுகிய வகை மாலைகள், நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட் போன்ற ஆபரணங்களை துணியால் தயாரிக்க கற்றுக்கொடுக்கப்படும்.
இதேபோல், ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பஞ்சகாவிய பூஜை பொருட்களை தயாரிக்கும் பயிற்சியில் பஞ்சகாவிய விளக்கு, மூலிகை சாம்பிராணி, கப் சாம்பிராணி, தூப சாம்பிராணி, அகர்பத்தி, கற்பூரம் ஆகியவற்றை தயாரிக்க கற்றுக்கொடுப்பதுடன், அதன் செயல்முறை விளக்கமும் அளிக்கப்படும்.
தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், சுயஉதவிக் குழுவினர் என அனைத்து தரப்பினரும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.