

சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுக்கு (நேர்காணல் இல்லாத பதவிகள்) ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (புதன்) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மே 21-ம் தேதி வெளியிட்டது. அதில், உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்), தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உதவி பொறியாளர் (சிவில்), தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி உதவி பொறியாளர், இளநிலை அறிவியல் அலுவலர், இளநிலை மேலாளர் (தொழில்நுட்பம்), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) உள்பட 47 விதமான பதவிகளில் 615 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 27-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் (ஜூன் 25) முடிவடைகிறது. உரிய கல்வித்தகுதியும், வயது வரம்பும் உடைய பட்டதாரிகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி இன்று நள்ளிரவு வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வு, பொது அறிவு தேர்வு ஆகிய இரு தேர்வுகளும் அனைத்து பதவிகளுக்கும் பொதுவானவை. இவற்றுடன் சம்பந்தப்பட்ட பாடத்துக்கான தேர்வையும் தேர்வர்கள் எழுத வேண்டும்.
குருப்-2 தேர்வு அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வருடாந்திரத் தேர்வு அட்டவணையின்படி, ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.