மலேசியாவில் இன்ஜினியர், டெக்னீஷியன்களுக்கு வேலை வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: மலேசியாவில் இன்ஜினியர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் முறையும் விவரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மலேசியாவில் பணியாற்ற குவாலிட்டி கண்ட்ரோல் இன்ஸ்பெக்டர், பைப்பிங் இன்ஜினியர், பிளானிங் இன்ஜினியர், டென்டரிங் இன்ஜினியர் மற்றும் பைப்பிங் போர்மேன் டிக் மற்றும் ஏஆர்சி வெல்டர்கள், பைப் பிட்டர் தேவைப்படுகின்றனர். இன்ஜினியர் பணிக்கு பி.இ அல்லது பி.டெக் பட்டம் அவசியம்.
குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டு பணி அனுபவம் வேண்டும். வயது 24 முதல் 42-க்குள் இருக்க வேண்டும், இன்ஜினியர் பணிக்கு சம்பளம் ரூ.70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வழங்கப்படும். போர்மேன் பணிக்கு சம்பளம் ரூ.54 ஆயிரம் முதல் ரூ.62,400 வரை பெறலாம். இதர டெக்னீஷியன்க ளுக்கு சம்பளம் ரூ.38 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும். சம்பளத்துடன் உணவு, விசா, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை யும் உண்டு.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்வோர் விசா கிடைத்த பின்னர் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக ரூ.35,400 செலுத்தினால் போதும். உரிய கல்வித்தகுதியும், தொழிற்தகுதியும் உடைய ஆண்கள், ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம், விண்ணப்ப படிவம், கல்வித் தகுதி, பணி அனுபவம் சான்றிதழ், புகைப்படம், பாஸ்போர்ட் நகல், ஆதார் நகல் ஆகியவற்றை ஜூன் 29-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) அறிந்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
