

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 24) நிறைவு பெறுகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 3,935
பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பாணை கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெளியானது. அதன்படி நடப்பாண்டு குரூப் 4 தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 24) நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மே 29 முதல் 31-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறியலாம்.
இதற்கிடையே, குரூப் 4 ஒரேகட்ட தேர்வாகும். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. இதனால் 10-ம் வகுப்பு தகுதி கொண்ட இந்த தேர்வை எழுத லட்சக்கணக்கான பட்டதாரிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.