ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி டிஎன்பிஎஸ்சி தேர்வு
சென்னை: 32 பதவிகளில் 330 காலியிடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பபணிகள் தேர்வுக்கான (நேர்காணல் பதவிகள்) அறிவிப்பு மே 7-ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி-யின் வருடாந்திர தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அத்தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.
தமிழ்நாடு சிமெண்ட் கழக உதவி மேலாளர் மற்றும் மேலாளர் (சுரங்கம்), துணை மேலாளர் (சுற்றுச்சூழல்), டிட்கோ உதவி பொதுமேலாளர் (திட்டங்கள்), வனத்துறை விஞ்ஞானி (கிரேடு-சி), பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவி இயக்குநர், தலைமைச் செயலக நிருபர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நகர் மற்றும் ஊரமைப்பு உதவி இயக்குநர், சிஎம்டிஏ உதவி பிளானர், சிறை மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை உளவியல் நிபுணர், காவல்துறை சமூகவியலாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை முதுநிலை பூச்சியியலாளர் உள்பட 32 விதமான பதவிகளில் 330 காலியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 13-ம் தேதி தொடங்கி ஜூன் 11-ம் தேதி முடிவடைகிறது. எழுத்துத்தேர்வு ஜூலை 20 முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விரிவாக அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
