

சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
உதவி பொறியாளர், வேளாண் விரிவாக்க அலுவலர், வேதியியலாளர், மருந்து ஆய்வாளர், அருங்காட்சியக காப்பாட்சியர் மற்றும் உதவி காப்பாட்சியர், உட்பட பல்வேறு பதவிகளில் 652 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு (நேர்காணல் இல்லாதது) கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட்டது. இத்தேர்வை 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டன. அதோடு தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசையும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டோர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி மார்ச் 17-ம் தேதி பதவிகள் வாரியாக வெளியிட்டது.
டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை: தற்போது பல்வேறு பதவிகளுக்கு சரியான சான்றிதழ்களையும் பதிவேற்ற தேர்வர்களுக்கு ஏப்ரல் 24 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பதிவேற்ற தவறினால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.
ஆன்லைன் சரிபார்ப்புக்கு பொதுப்பிரிவு இடங்களுக்கு "ஒரு காலியிடத்துக்கு 3 பேர்" என்று வீதத்திலும், இடஒதுக்கீட்டு பிரிவு இடங்களுக்கு "ஒரு காலியிடத்துக்கு 2 பேர்" என்ற அளவிலும், பணி அனுபவம் நிர்ணயிக்கப்பட்ட பதவிகளுக்கு "ஒரு காலியிடத்துக்கு 5 பேர்" என்ற விகிதாச்சார அடிப்படையிலும் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தேர்வர்கள் தவறினால், ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2-வது கட்ட பட்டியல் வெளியிடப்படும்.
அதைத்தொடர்ந்து நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.