சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல்துறையில் விரைவில் 1,352 எஸ்.ஐ.க்கள் தேர்வு

சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல்துறையில் விரைவில் 1,352 எஸ்.ஐ.க்கள் தேர்வு
Updated on
1 min read

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல்துறையில் விரைவில் 1,352 சப்-இன்ஸ்பெக்டர்கள் (எஸ்.ஐ.க்கள்) நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பட்டதாரிகள் ஏப்.7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறையில் 1,352 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதில் 53 இடங்கள் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கான பின்னடைவு பணியிடங்கள் (பேக்-லாக் வேகன்சி) ஆகும். ஆண், பெண் இருபாலரும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30, பிசி, பிசி - முஸ்லிம், எம்பிசி வகுப்பினருக்கு 32. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் 3-ம் பாலினத்தவருக்கு 35, ஆதரவற்ற விதவைகளுக்கு 37. குறிப்பிட்ட உடற்தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 7 சதவீத ஒதுக்கீடு உண்டு. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு (ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை) 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.

உரிய கல்வித்தகுதியும், உடற்தகுதியும் உடைய பட்டதாரிகள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தை (www.tnusrb.tn.gov.in) பயன்படுத்தி ஏப்.7-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் மே 3-ம் தேதி ஆகும்.

விண்ணப்பதாரர்களுக்கு முதலில் எழுத்துத்தேர்வும் அதைத்தொடர்ந்து, உடற்தகுதி தேர்வும், இறுதியாக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, உடற்தகுதி, காலியிடங்களின் விவரம், தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களை சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்முறையாக சிலம்பம் சேர்ப்பு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளின் பட்டியலில் தற்போது முதல்முறையாக சிலம்பம் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற சிலம்பம் வீரர்கள் இப்பிரிவில் இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் ஆவர்.

சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.36,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சம்பளத்துக்கு இணையானது. சம்பளத்துடன் அகவிலைப்படி, வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப் படி, இடர் படி, உணவு படி ஆகியவை சேர்த்து ரூ.65 ஆயிரம் வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in