கிண்டியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆன்லைனில் பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு
சென்னை: கிண்டியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வரும் 24-ம் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
இந்த முகாம் சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் கலந்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதால், கலந்துகொள்ள விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவுசெய்து, முகாமில் பங்கேற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
