

சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இதற்கான நேர்காணல் ஜனவரி 4-ம் தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். சுயதொழில், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், காப்பீடு நிறுவனங்களில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள். சுயஉதவி குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆயுள் காப்பீடு விற்பனை செய்வதில் முன்அனுபவம் உள்ளவர்கள், கணினி பயிற்சி உள்ளவர்கள், சொந்த பகுதி குறித்து நன்கு அறிந்தவர்கள், சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் ஆகியவை விருப்ப தகுதிகள் ஆகும்.
இதர ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவோர் விற்பனை செய்யும் ஆயுள் காப்பீடு பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜனவரி 4-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் பங்கேற்கலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.