செங்கல்பட்டில் நவ.15 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் நவ.15 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.

முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான பணியாட்களை, நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்ய உள்ளன. வேலை அளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொண்டு முற்றிலும் இலவசமாக இம்முகாமில் கலந்துகொள்ளலாம். மாற்றுத் திறனாளி வேலை நாடுநர்களை தேர்ந்தெடுக்கும் வேலையளிப்பவர்களும் கலந்துகொள்ளலாம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, பொறியியல், ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர் போன்ற கல்வித்தகுதி உடையவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வேலை நாடுநர்களும் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல்கள், சுயவிவரக் குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நவ.15 காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.

இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 6383460933, 9486870577 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in