

சென்னை: நேர்காணல் உடைய தொழில்நுட்ப பணிளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்காணல் உடையது), கடந்த ஆகஸ்ட் 12, 19, 20, 21 ஆகிய தேதிகளில் கணினிவழியில் நடத்தப்பட்டது. மொத்தம் 12,894 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த 50 நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 404 தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குருப்-2 காலியிடங்கள் அதிகரிப்பு: இதனிடையே, டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் குருப்-2ஏஅறிவிக்கையில் காலியிடங்களின் எண்ணிக்கை 2,327 ஆக இருந்தது. தற்போது பிற்சேர்க்கை மூலம் மேலும் 213 பணியிடங்கள் சேர்த்து, காலியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக உயர்த்தப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். காலி பணியிடங்கள் அதிகரிப்பால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விரைவாக வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.பிரபாகர் பொறுப்பேற்ற பின்னர், தேர்வு முடிவுகள் வெகுவிரைவாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வின் (நேர்காணல் இல்லாதது) முடிவுகளையும் விரைந்து வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.