

சென்னை: அரசு மருத்துவமனைகளுக்கு விரைவில் 47 பிசியோதெரபிஸ்டுகள் நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் இன்று (அக்.19) வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்: தமிழ்நாடு மருத்துவ சார்நிலை பணியின் கீழ் 47 பிசியோதெரபிஸ்டுகள் (கிரேடு-2) நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிசியோதெரபி பட்டதாரிகள் (பிபிடி) இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆகவும், எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசி-முஸ்லிம் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 59 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எனில் 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர் என்றால் 50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் (www.mrb.tn.gov.in) விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 7-ம் தேதி ஆகும்.
எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். இதில் கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் (10-ம் வகுப்புத்தரம்), பிசியோதெரபி பாட தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். தமிழ் மொழி தேர்வுக்கு 50 மதிப்பெண், பிசியோதெரபி தேர்வுக்கு 100 மதிப்பெண். இத்தேர்வுகள் கணினி வழி தேர்வுகளாக (கொள்குறிவகை) அமைந்திருக்கும். தமிழ் மொழி தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவேண்டும். தேர்வு கட்டணம், தேர்வு மையம், பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.